குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விவேக் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்விற்கு படித்து வந்துள்ளார். மேலும் தனது வீட்டிலிருந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மயிலாடுதுறை டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் விவேக் சென்னைக்கு சென்று கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை எழுதிவிட்டு மீண்டும் மயிலாடுதுறை திரும்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
இதனால் விவேக் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து மாலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது விவேக் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் உடனடியாக விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் விவேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கலியபெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.