திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்தின்மனஅள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ்(26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கு பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணவேணி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து கிருஷ்ணவேணியின் தாய் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வரதட்சணை வாங்கி வரவில்லை எனக் கூறி எனது மகளை கோவிந்தராஜ், அவரது பெரியம்மா செல்வி ஆகியோர் எனது மகளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதனால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தராஜ், செல்வி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.