அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 3 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியில் சாந்தி(56) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியராஜூக்கு அரசு வேலை வாங்குவதற்காக சாந்தி முயற்சி செய்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி நிர்வாகியான மணிகண்டன் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக மணிகண்டன் உறுதி அளித்தார். அதனை நம்பி சாந்தி 4 பவுன் தங்க சங்கிலி, 3.45 லட்சம் பணம் ஆகியவற்றை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது மணிகண்டன் உள்பட6 பேர் சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சாந்தி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் உள்பட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.