கடன் தொல்லையால் தம்பதியினர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சேகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்த சேகருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக சுமார் 1 கோடி வரை சேகர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த ஒரு மாதமாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு பிரச்சினை செய்ததால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் நடைபயிற்சி செய்வது போல வீட்டிலிருந்து புறப்பட்டனர். இருவரும் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொன்மலை காமாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் பழைய ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு சென்று கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டனர். இதனை அடுத்து வலி தாங்க முடியாமல் சேகர் செல்போன் மூலம் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு எங்களை காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெயசித்ராவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேகர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.