மீண்டும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் கோடைகால விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பிலிருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த ரயில் மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்களும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் இன்று முதல் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வரை காலை 7.20 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் சென்றடையும். பின்னர் மறு மார்க்கத்தில் தாம்பரம்-நெல்லை வராந்திர சிறப்பு ரயில் நாளை முதல் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:40 மணிக்கு நெல்லை வந்தடையும். மேலும் இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, கீழ கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த சிறப்பு ரயில்களில் 1.3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் 3 மாதங்களில் 2.5 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.