சென்னையில் கஞ்சா கலந்த சாக்லேட் மற்றும் கேக் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, விற்பனையாளர்களை கைது செய்து அவர்களிடமிருந்து டன் கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றன. தற்போது கஞ்சா விற்பனை மற்றும் மற்ற பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக சோதனை நடத்திய போலீஸார் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் ரோஷன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாமஸ் என்ற மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொள்முதல் செய்து அதை கலந்து போதை கேக் தயாரித்து அதை ரூ.3000 வரை விற்றது தெரிய வந்துள்ளது.