குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன ஊழியர் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நிலையில் போலீசார் உயிருடன் மீட்டு இரண்டு பேரை கைது செய்தார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுந்திருக்கும் தசராபல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் பரதராமியில் மளிகை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியதை தொடர்ந்து பலர் பல கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி தாமோதரனை காணவில்லை. இதனால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடினார்கள். கடத்தப்பட்ட தாமோதரன் காட்பாடியில் இருக்கும் ஆருத்ரா நிறுவனத்தில் கணக்காளராக வேலையில் இருந்த பொழுது அவரை நம்பி பலர் பல கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கின்றார்கள். இதில் தாமோதரனுக்கு ஒரு லட்சத்துக்கு ரூபாய் 1000 என கமிஷன் தந்திருக்கின்றார்கள். பின்னர் இது மோசடி நிறுவனம் என தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தில் ரமேஷ் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் 23 லட்சமும் சுரேஷ் என்பவர் ஏழு லட்சமும் முதலீடு செய்து இருக்கின்றார்கள். அவர்கள் தாமோதரனிடம் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு கேட்டு இருக்கின்றார்கள்.
ஆனால் தாமோதரன் இழுத்து அடித்துக் கொண்டே பணம் வாங்கித் தரவில்லை. இதனால் சென்ற 12ஆம் தேதி அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது பாதுகாப்பு படை வீரர் ரமேஷும் சுரேஷ் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் காரில் கடத்திச் சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாமோதரனின் மனைவிக்கு கடத்தல்காரர்கள் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்பு கொண்டு உள்ளார்கள். உடனடியாக தாமோதரனின் மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் சென்றார்கள். போலீசாரை பார்த்ததும் பாதுகாப்பு படை வீரர் ரமேஷ் தம்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் சுரேஷ் மற்றும் ராஜ்குமாரை கைது செய்து தாமோதரனை உயிருடன் மீட்டார்கள். தாமோதரனை உயிருடன் மீட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வேலூர் சரக டிஐஜி பாராட்டினார்கள்.