தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகராபாத்தில் இருக்கும் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் (16-ஆம் தேதி) இரவு பணி முடிந்து ஊருக்கு செல்வதற்கு காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் நின்று கொண்டிருந்தும், அவ்வழியே எந்த ஒரு பேருந்தோ, வாகனங்களோ வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உடனே யோசித்து ஒரு முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவு அவருக்கு வினையாக முடிந்துள்ளது.
ஆம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பேருந்தை திருட்டு தனமாக எடுத்து ஓட்டிச்சென்று சென்று தாம் செல்லும் இடம் வந்ததும், அதை அங்கேயே நிறுத்தி விட்டு ஹாயாக சென்றுவிட்டார். அதே நேரம் பேருந்து காணாமல் போனதை கண்டு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் பதட்டமடைந்தனர்.
இதையடுத்து ஊழியர்கள் விசாரித்ததில் பேருந்தை மற்றொரு ஊழியர் திருட்டு தனமாக ஓட்டி சென்றது தெரியவந்தது. பின்னர் நடந்தவற்றையெல்லாம் கூறி, போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்