Categories
உலக செய்திகள்

கனமழை வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிப்பு… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி கூறியுள்ளார். இந்த நிலையில் மழை தற்போது பெருமளவில் குறைந்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கனமழை வெள்ளத்தால் இதுவரை 3.30 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 1,545 பேர் பலியாகி உள்ளனர். மலேரியா, டெங்கு போன்ற நீர் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்பட்டு 90 ஆயிரம் பேர் வரை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த சூழலில் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐநா கூறியுள்ளது. இவற்றில் 34 லட்சம் குழந்தைகளுக்கு உடனடியாக உயிர்காப்பு உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐநா கூறியுள்ளது. மேலும் முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |