நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்தரபுரம் பகுதியில் கூலித்தொழிலாளியான தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா கிரேஸ்(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திடல் பகுதியில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபிதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.