வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே தெரிவித்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி, செபாவில் உள்ள சந்தேகத்திற்கிடமான ஜிஹாதிகள் ஒரு போதகரின் வீட்டில் 7 பேரைக் கடத்திச் சென்றனர். 3 நாட்களுக்குப் பிறகு 5 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2015-ஆம் ஆண்டுக்கு முன் எந்தவித வன்முறையும் இல்லாமல் இருந்த இந்நாட்டில், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்குப் பகுதியில் தொடங்கிய ஜிகாதிகளின் கிளர்ச்சி வேகமாக கிழக்கு பகுதியை நோக்கி அண்டை நாடான புர்கினா பாசோவிற்கும் வந்தடைந்தது.
2015-ஆம் ஆண்டு முதல் புர்கினா பாசோவில் ஜிகாதி கிளர்ச்சிக் குழு நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு இதுவரை 750 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 6,00,000 பேர் உயிருக்கு பயந்து போய் தமது பூர்வீக இருப்பிடங்களை காலி செய்து விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று விட்டனர்.
ஐ.நாவின் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், கடந்த ஆண்டு புர்கினா பாசோ மற்றும் அண்டை நாடான மாலி மற்றும் நைஜரில் நடந்த ஜிகாதி தாக்குதல்களில் கிட்டத்தட்ட 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீப ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க படைகளின் பயிற்சியும் உதவியும் புர்கினா பாசோ நாட்டிற்கு கிடைத்தது. இருப்பினும் புர்கினா பாசோவின் இராணுவத்தால் வன்முறையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
புர்கினா பாசோவின் பாதுகாப்பு அமைச்சகம் கூடுதலாக மேலும் 2,000 வீரர்களை நியமிக்க முயற்சிக்கிறது. மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக பொதுமக்களை போராட்டத்தில் பயன்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.