திருப்பூரில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இந்த பாட்டில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் மங்களம் ரோட்டில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. ஜூலை 24 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் வரும் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பாட்டில் நடப்பதாகவும் இந்த பாட்டில் பெண்களுக்கும் ஜோடிகளுக்கும் இலவச அனுமதி என்றும், பெண்களுக்கு மதுபானம் இலவசம் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஹோட்டல் நிர்வாகத்தை கண்டித்து ஹோட்டல் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பார்ட்டி நடப்பதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் ஹோட்டல் நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஹோட்டலின் நிர்வாகி பார்த்திபன் இது தொடர்பாக தெரிவித்ததாவது: “எங்கள் ஹோட்டலை நாங்கள் முறையாக அனுமதி பெற்று நடத்தி வருகிறோம். இந்த விளம்பரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டீம் வாயிலாக தவறுதலாக வேறு ஹோட்டலுக்கு பதில் எங்கள் ஹோட்டலுக்கு வந்து விட்டது. தகவல் தெரிந்தவுடன் இது தொடர்பாக விளக்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டோம். விளம்பரம் குறித்து எங்கள் தரப்பில் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இது போல் எந்த பார்ட்டியும் ஏற்பாடு செய்யவில்லை. காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போன் கால் வந்துவிட்டது. அனைவருக்கும் நாங்கள் உரிய விளக்கத்தை அளித்து வருகிறோம். விதிகளுக்கு புறம்பாகவும் கலாச்சாரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லை என்று உறுதியாக கூறுகிறோம்” என அவர் தெரிவித்திருந்தார்.