வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்புடையது அல்ல என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ரத்தினம் உள்ளிட்ட 70 பேர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என உத்தரவில் கூறியது ஐகோர்ட் விதிகளை மீறிய செயல். எனவே ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் .