மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழர்களின் உரிமைக்குரலாக விளங்கிய டத்தோ எஸ். சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ எஸ். சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், பொதுப்பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த டத்தோ எஸ். சாமிவேலுவின் மறைவையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் இருந்தவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான எஸ். சாமிவேலுவின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், என்று தெரிவித்துள்ளார்.