போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் தனக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸோடு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கி உள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனி பாதுகாப்பு போலீசார் உதவி உடனே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை அவர் கொள்ளை அடித்து சென்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் தற்போது அரசில், கட்சியிலும் எந்த பொறுப்பில் இல்லை எனவும் , அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த மனதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீதும், பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆதிராஜாராம் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது இன்றைய தினம் நீதிபதி இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தரையன் உத்தரவிட்டிருக்கிறார்.