தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்ட துவக்கமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது சில குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சாப்பாடு ஊட்டியும் விட்டார். இந்நிலையில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, எத்தகைய நிதி சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவது தான் எங்களுடைய முதல் கடமை.
பசியை போக்குவதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். காலை நேரத்தில் பசியாக வரும் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டமானது என்றென்றைக்கும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். என்னுடைய வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நாள் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, கற்றல் திறனும் அதிகரித்துள்ளது. ஜாதி மற்றும் வறுமை என்றென்றைக்கும் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் சொன்னார்கள் என்று கூறினார்.