Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“16 ஆயிரம் புத்தகங்கள் என்பது குறைவானது தான்”…. அவர் நேரில் ஆஜராக வேண்டும்…. மதுரை ஐகோர்ட் அதிரடி….!!!!

தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் முற்றிலுமாக நிறைவேற்றப்படவில்லை. எனவே உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவை வைக்கப்பட வேண்டும். மேலும் நூலகத்தில் தேவையான அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயண பிரசாத் மற்றும் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கும் வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் கூறியதாவது “ஏற்கனவே உலகத்தமிழ் சங்கத்தில் 16 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன” என்றார். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது “16 ஆயிரம் புத்தகங்கள் என்பது மிக குறைவானது தான். எனவே தமிழ் சங்கத்தினுடைய துணை இயக்குனர் நேரில் ஆஜராகி உலக தமிழ் சங்கத்திற்காக ஒதுக்கப்படும் நிதி, அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள், புத்தக விவரங்கள் உள்ளிட்டவைகளை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதோடு இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |