தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகள் ஆக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்விணையாற்றும் விதமாக இந்த கருத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மொழிகள் பேசும் மக்களை கொண்ட இந்திய ஒன்றியத்தில் ஹிந்தி கற்க வேண்டும் என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டுக்கு நேர் எதிரானது. தமிழையும், மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தி தான் தேசிய மொழி என்ற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. இது ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை ஹிந்தியா என்ற பெயரில் பிளவு படுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம்.
தமிழ் உள்பட 22 இந்திய மொழிகளை அலுவல் மொழிகள் ஆக்கி ஹிந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாட வேண்டும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதற்கான முயற்சிகளிலேயே மத்திய அரசு முனைப்பாக உள்ளது. இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. கலாச்சாரம், வரலாற்றை அறிய இந்தி கற்க வேண்டும் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டிற்கு எதிரானது. இந்தி மொழி உருவானதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி உருவாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.