பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீலநிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள திண்டிவனத்தை சேர்ந்த டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவருடைய நண்பரும் புதுவை கோரிமேடு அருகில் தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர் சாப்பிடுகையில் அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது.
உடனடியாக அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தபோது அதில் நீலநிற கையுறை இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர் உடனே ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அதற்கு ஊழியர்கள் மன்னிப்புகேட்டு வேறு பர்கர் தருவதாக கூறினர். எனினும் மறுப்பு தெரிவித்து டேவிட் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.