அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். எஸ்பி வேலுமணி மீது கிராமப்புறங்களில் எல்இடி விளக்குகளை மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டதால், 7 எம்எல்ஏக்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரிகள் சோதனை நடத்திய போது தன்னுடைய வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், வெறும் 7500 மட்டும் தான் கிடைத்தது அந்த பணத்தையும் வழக்கம்போல் என்னிடமே கொடுத்து விட்டார்கள் எனவும் எஸ்பி வேலுமணி கூறி இருந்தார். இந்நிலையில் சோதனை முடிந்த பிறகு எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அரசியல் பழிவாங்களின் உச்ச கட்டத்தை திமுகவினர் செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திசை திருப்புவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2 முறை சோதனை நடத்திய போது எதுவுமே கிடைக்காதது போன்று, இந்த முறையும் வெறும் 7500 தான் கிடைத்தது. அதையும் என்னிடமே தந்து விட்டார்கள் என்றார். அதன்பின் வழக்கம்போல் வீட்டில் உள்ள டேபிள் மற்றும் சோபா போன்றவற்றை படம் எடுத்து விட்டு சென்றார்கள். எல்இடி விளக்குகளால் மின் பயன்பாடு குறைவு தான் ஏற்பட்டது. அதற்கான டெண்டரும் முறையாகத்தான் நடந்துள்ளது. இந்த திமுக ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஸ்டாலின் குடும்பம் மொத்தமாக மாநிலத்தையே சுரண்டி 5000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்துள்ளனர் என்றார்.