ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் செவ்வாயன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது.
“அப்போது ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதித்து அவர்களுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, ஏனெனில் பணம் சம்பாதிப்பது அவர்களின் தொழில்” என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.
மேலும், மொபைல் அடிப்படையிலான ஆன்லைன் கேமிங் செயலிகளின் ஆபரேட்டர்கள் வழக்கில் பங்கேற்காததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. மனுதாரர் வினோத் குமார் திவேதி என்ற உள்ளூர் வழக்கறிஞர், இளைஞர்கள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கூறி, 4 பிரபலங்களை ஆன்லைன் கேம்களை விளம்பரப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் , “கட்டுப்பாடற்ற முறையில் அதிகமாக அதில் ஈடுபடுவது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும்” என்பதால் இது “சுய கட்டுப்பாடு வேண்டும் ” என்று நீதிமன்றம் கூறியது.