பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்குவதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பிய நிலையில், அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீ பிடித்து எரியும் சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் (Fireproof) பேட்டரிகள் வடிவில் வந்துள்ளது. தங்களது நிறுவனத்தின் பேட்டரி அனைத்து வாகனங்களிலும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் லித்தியம்-அயன் ஃபெரோ பாஸ்பேட் (LiFePO4) ஃபயர்ஃப்ரூப் பேட்டரிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கோமாகி அறிவித்து உள்ளது.
கோமாகி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதன் புதிய EV பேட்டரியான LiFePO4 சாதாரண எலெக்ட்ரிக் டூவீலர் பேட்டரியை விட அதிக தீ எதிர்க்கும் திறன் (fire resistant) கொண்டது. LiFePO4 பேட்டரி செல்களில் அதிக இரும்பு உள்ளடக்கம் (iron content) இருப்பதால் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.