மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்த பாம்பை அடிக்கும் போது வீட்டில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தக்குடிபட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்துள்ளது. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். இது எதிர்பாராத விதமாக மின் இணைப்பு பெட்டியில் பட்டு அங்கிருந்த ஒயர்கள் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
இதனால் வீட்டில் இருந்த பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறி உள்ளது. இதில் வீட்டின் ஓடுகளும் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுப்பிரமணியன், விஜயராணி, ராமகிருஷ்ணன், மோகன்ராஜ் மற்றும் மகேஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவமானது அன்னவாசல் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.