தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோன்று தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எஸ்பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 முறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 3-வது முறையாக இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அனுமதி வழங்கியதாக ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி ரெய்டு நடத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது 3-வது முறையாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சராக சி. விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது அவர் முறைகேடாக 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரி அமைவதற்கு முன்பாக அங்கு நீண்ட நாட்கள் ஒரு மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும். அதோடு ஒரு குறிப்பிட்ட அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, மருத்துவர்கள் அடங்கிய குழு அதை கண்காணித்து ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு பல விதிமுறைகள் இருக்கும் நிலையில் ஊத்துக்கோட்டை மற்றும் மஞ்சக்கரணை ஆகிய பகுதிகளில் புதிதாக வேல்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு தனக்கு நெருக்கமான மருத்துவர்கள் மூலம் சான்றிதழ்களை வழங்கி அனுமதி கொடுத்ததாக விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. இதற்காக அவர் ஆதாயம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் சில அரசு மருத்துவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்படுகிறது