அ.தி.மு.க முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை அடையாரிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து கொண்டிருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார். இதையடுத்து சி.வி. சண்முகம் செய்தியாளரை சந்தித்தபோது “இந்த சோதனை அரசியல் காழ்ப் புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இதுஒரு பழி வாங்கும் நடவடிக்கை ஆகும். முன்பே இது போன்று 2 முறை சோதனை மேற்கொண்டனர். எனினும் அதில் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டுமாக புது வழக்குகள் போடப்பட்டு சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க் கட்சிகளை அடக்கி, ஒடுக்கி ஒழிக்கலாம் என்று நினைக்கிறது.
ஆளத்தெரியாத முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதை விட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திறனில்லாத திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இதுபோன்ற சோதனைகளை நடத்துகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் அதிகரித்திருக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.