கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதை அடுத்து பலத்த மழை பெய்ததன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் காலையில் ஊருக்குள் மீண்டும் வெள்ளம் புகுந்தது. இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் ஆதிவாசி மக்கள் 12 பேரை மீட்டு தொறப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளி முகாமில் தங்க வைத்தார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்தார்கள். இது போலவே தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிகொல்லி பகுதி சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து சாலையில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். 1 1/2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.