சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் நாங்கள் கோப்பையை வெல்வதற்கு உத்வேகமாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானாகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, தசுன் ஷனாக 2 என முக்கிய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றியதால் இலங்கை ஆரம்பத்திலிருந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த அணி 8.5 ஓவரில் 58/5 என இருந்தது.
இதனால் இலங்கை அணி 100 ரன்களை கூட தாண்டாது.. இலங்கையின் கதை முடிந்து விட்டது என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்ட நேரத்தில் 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹசரங்காவும், ராஜபக்சேவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹசரங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 36(21) ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இறுதிவரை நின்ற ராஜபக்சே 6 பவுண்டரி, 3 சிக்ருடன் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் தான் அந்த அணி 170 ரன்களை தொட்டுள்ளது.
இதையடுத்து 171 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் களமிறங்க, மதுஷன் வீசிய 4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் பக்கர் ஜமான் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.. 22/2 என தவித்த அந்த அணிக்கு 3ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
வழக்கம்போல முகமது ரிஸ்வான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜோடியாக இப்திகார் அகமது 32 ரன்கள் போராடிஆட்டம் இழந்தார். மேலும் முடிந்தவரை போராடிய முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 55(49) ரன்கள் எடுத்த நிலையில், நெருக்கடியான கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. அதன்பின் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 6 ஆவது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஏனென்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் அந்த அணி இளம் படைகளை வைத்து முக்கிய போட்டியில் தைரியமாக விளையாடி 6ஆவது முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் லீக் போட்டியில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. இனிமேல் அவ்வளவுதான் மீள முடியாது என்று இருந்த கட்டத்தில் தான் அந்த அணி மனம் தளராமல் அடுத்தடுத்து போட்டிகளை வென்று தற்போது இறுதி போட்டியில் கோப்பையும் வென்று அசத்தியிருக்கிறது.
அதே சமயம் இந்த போட்டி நடைபெற்ற துபாய் மைதானத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே இரவில் நடைபெறும் டி20 போட்டியில் டாஸ் வெல்லும் அணிகள் சேசிங் செய்தால் வெற்றி உறுதி என்பது உலகுக்கு தெரிந்த ஒரு விஷயம். இந்த ஆசிய தொடரில் கூட மொத்தம் 13 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 10 முறை சேச்சிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளது.. அப்படி இருக்கும் நேரத்தில் டாசை இழந்த இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய விஷயம்..
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் நாங்கள் கோப்பையை வெல்வதற்கு உத்வேகமாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானக்கா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆம் துபாய் மைதானத்தில் டாஸ் என்பதற்கு விதிவிலக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாசை தோற்ற பின்பும் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 4ஆவது முறை கோப்பையை வென்றது.
இது குறித்து அவர் போட்டி முடிந்ததும் பேசியதாவது, எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அவர்களை பெருமைப்பட வைத்துள்ளோம் என்று நம்புகிறேன். 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து கோப்பையை வென்றது எனது மனதில் இருந்தது. அதனைப் பார்த்து எங்களது இளம்வீரர்கள் இந்த சூழ்நிலைகளை புரிந்து தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக 5 விக்கெட் இழந்தபின் ஹசரங்கா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அதிலும் எங்களது இன்னிங்ஸின் கடைசி பந்தில் ராஜபக்சே சிக்சர் அடித்தது தான் போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது.. 160 ரன்கள் சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்பதால், 170 என்பது மனதளவில் தைரியத்தை தந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் நாங்கள் தீவிரமாக விவாதம் செய்தோம். எங்களது அணியில் ஒவ்வொரு வீரருமே சிறப்பாக செயல்பட்டதால் தான் கோப்பையை வெல்ல முடிந்துள்ளது. லீக் சுற்றில் சில தவறுகள் செய்திருந்தாலும் இன்று 100% சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம். மேலும் எங்களது பயிற்சியாளர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வு குழுவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்தார்..
Take a bow, Sri Lanka! 🙌 🙌
Men's #AsiaCup Champions for the 6️⃣th time! 🏆#RoaringForGlory #SLvPAK pic.twitter.com/9xf2sjlIBX
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 11, 2022