கேரளமாநிலம் பாலக்காட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4:20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின் ரயில் பெட்டிகளை சுத்தம்செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்திலுள்ள 3வது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பிட்லைன் அருகில் எஸ் 3 பெட்டி திடீரென்று தடம் புரண்டது. அதனை தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப ஊழியர்களும் மீட்புபணியில் ஈடுபட்டனர். அதன்பின் சுமார் 3 மணிநேரம் மீட்பு பணி நடந்த நிலையில், ஜாக்கி உதவியுடன் தடம்புரண்ட எஸ் 3 பெட்டியின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு ரயில் பிட்லைனுக்கு எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் நெல்லை ரயில்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அத்துடன் ரயில் தடம்புரண்டது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மதுரையில் இருந்து ரயில்வே அதிகாரிகள் வந்து நேரடியாக விசாரணை நடத்தப் போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.