இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த தேர்தலில் கூட பாஜக அரசு தான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாஜகவை முறியடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்று முயற்சி செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை பார்த்து கேசிஆர் தன்னுடைய திட்டத்தை பாதியிலேயே கைவிட்டார்.
ஆனால் கேசிஆர் மீண்டும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாஜகவை விமர்சித்து பேசுவதை கேசிஆர் தவறாமல் வைத்துக் கொள்கிறார். இவர் சமீபத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 5-ம் தேதி கேசிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
அதாவது தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறார். இதற்கு பாரத் ராஷ்டிரி சமிதி என்று பெயரிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பை தரும் என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. ஏனெனில் தெலுங்கானாவை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இல்லை. இதில் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டும் தான் இருக்கிறது. இந்த 2 வருடங்களுக்குள் கேசிஆரின் திட்டம் நிறைவேறுமா என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.
ஏனெனில் மற்ற மாநிலங்களில் பாஜக கட்சியின் நிலைப்பாடு வலுவான நிலையில் இருக்கும் போது, கேசிஆர் கனவு எப்படி பலிக்கும். அதன் பிறகு தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என கேசிஆரிடம் விவசாயிகள், அரசு அதிகாரிகள், அரசியல் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக முத்த தலைவர் பல்ல ராஜேஸ்வரர் ரெட்டி கூறியுள்ளார். மேலும் கே.சி.ஆர் மாநில கட்சியை தேசிய கட்சியாக மாற்றி தேசிய அரசியலில் கூடிய விரைவில் ஈடுபடுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.