Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் 2500 கிலோ ஆட்டுக்கறி விருந்து – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

பரமத்தி வேலூர் அருகேயுள்ள திருப்பதி முனியப்பசாமி கோயிலில் 2 ஆயிரத்து 500 கிலோ ஆடுக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்திப் பெற்ற 60 அடி உயரம், 25 அடி அருவாள் ஏந்திய திருப்பதி முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதைத்தொடர்ந்து இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் முனியப்பசாமியிடம் வேண்டுதல் வைத்தால் மழை பெய்து, விவசாயம் செழிப்படைவதாகவும், குழந்தை பேறு கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகள், சேவல்களை பலிகொடுக்க கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

அதன்படி உள்ளூர் பக்தர்கள் முதல் வெளிமாவட்ட பக்தர்கள் வரை, அங்கு வருகை தந்த பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக ஆடுகள், சேவல்களை கோவில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினர்.

காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 260 ஆடுகளை விழாக் குழுவினர் திருப்பதி முனியப்பசாமிக்கு பலியிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். பின்னர் 2 ஆயிரத்து 500 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து, அங்குவந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும் நாளை மறு பூஜையாக 200-க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் வழங்கி வேண்டுதலை நிறைவேற்றவுள்ளனர் எனவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Categories

Tech |