தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச அரிசி ஆகியவற்றை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிவாரண உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு என்பது அனைத்து வேலைகளுக்குமே அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இருப்பிட சான்று ஆவணமாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்குவதை அரசு உறுதி செய்து வருகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில ரேஷன் கடைகளில் மூன்று மாதங்களாக 13 லட்சம் குடும்ப அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்க தவறி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் அவலம் ஏற்படுகிறது.
அதனை சரி செய்யும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து ரேஷன் பொருட்களை வாங்காத குடும்பங்களுக்கு மதுரை மாவட்ட வளங்கள் அலுவலர்கள் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினர். மேலும் அதில் தெரிவித்த தகவல்கள் உணவுப் பொருள் நுகர்வோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் அதனால் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.