சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் செலுத்துகிறது.
இந்த பாஜக அரசு நாட்டில் இருக்கும் 130 கோடி மக்களின் வாழ்க்கையை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமையை தொடர்ந்து பறித்து வருவதோடு, மாநில அரசின் உரிமையை காலில் போட்டு மிதித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசாகவும் திகழ்கிறது. நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்களின் நலனுக்காக கேள்வி எழுப்புவதற்கு என்றும் அஞ்சமாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தொகுதிக்காக மட்டுமே கையில் எடுத்த மேட்டூர் அணை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக முழுவதும் பரவலாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.
திமுக அரசு நம்மோடு சேர்ந்து 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும். பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ வேலுக்கு 8 வழி சாலை திட்டத்தில் ஏன் இந்த தடுமாற்றம். நான் இதை கேட்டால் கூட்டணியில் இருந்து கொண்டு குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். நம்முடைய முதலமைச்சருக்கு 1000 வேலைகள் இருக்கிறது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு மக்கள் வேலைகளை முதலமைச்சருக்கு நான் நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்.