தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர் யாருமில்லை. இவரது வேடம் திரைப்படத்தில் சின்னதாக இருந்தாலும் அதனை காண ஒரு ரசிகர் கூட்டமே வரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் தான். இவரது பெயர் விஜயலட்சுமி ஆகும். இவர் மிகவும் திறமையாக நடனம் ஆட கூடியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சில்க் ஸ்மிதா தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை பூர்விமகமாக கொண்டவர். இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு 17 வயதிலேயே திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவரது சகோதரரான நாகவர பிரசாத் இதனை மறுத்துள்ளார்.
இவர் திரையுலகில் ஒப்பனை கலைஞராக அறிமுகமானார். இவரை நடிகர் வினுசக்கரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் என்ற பெயரில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின் இந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. தனது 17 வருட சினிமாவில் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல தயாரிப்பாளர்கள் இவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க போட்டி போட்டுள்ளனர். இதற்கு காரணம் இவரது நடன திறமையே ஆகும். இவரது நடனத்தால் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் பல உள்ளன.
அதிலும் குறிப்பாக மூன்று முகம், சகலகலா வல்லவன், பாயும்புலி போன்றவைகளை குறிப்பிட்டு கூறலாம். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக இருந்த சில்க் ஸ்மிதா அதன்பின் நடனத்தில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த தொடங்கினார். சில்க் ஸ்மிதா என்ற பெயரை கேட்டாலே கவர்ச்சி மட்டும் தான் இளைஞர்களுக்கு நினைவு வரும். ஆனால் அதனை உடைத்து அலைகள் ஓய்வதில்லை, தாலாட்டு கேட்குதம்மா போன்ற திரைப்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார். நடிகர் வினு சக்கரவர்த்தியோ இவரை தனது மகள் என பல பேட்டிகளில் கூறி இருப்பார். ஆனால் கோலிவுட் வட்டாரங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பல்வேறு கட்டுக்கதைகள் பரவி வந்தது. ஆனால் இவர் ஒரு நெருப்பு என பல நடிகர் மற்றும் நடிகைகள் பெருமையாக புகழ்ந்து வருகின்றனர்.
இவர் காதல் தோல்வி காரணமாக தனது 35 வயதிலேயே போதைக்கு அடிமையானார். அதன் பின் இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் இருக்கும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனைவராலும் கூறப்படுகிறது. சில்க் ஸ்மிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய சகோதரர் கூறி வருகிறார். ஆனால் இன்றுவரை அவருடைய இறப்பில் இருக்கும் மர்மம் என்ன என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவருடைய வாழ்க்கையை மையமாக கொண்டு “டர்டி பிக்சர்” என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.