ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.. ஆம், நசீம் ஷா பேட்டிங்கில் ஹீரோவாக உருவெடுத்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை, கையில் 1 விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், ஃபசல்ஹாக் ஃபரூக்கிக்கு எதிராக முதல் 2 பந்துகளில் இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்தார் நசீம், நான்கு பந்துகள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பரபரப்பான 19வது ஓவரை ஃபரீத் அகமது வீசினார்.. இந்த ஓவரில் ஆசிப் அலி 4ஆவது பந்தில் ஒரு சிக்சரை அடித்தார்.. அடுத்த பந்தையும் அவர் சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது, ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்ற கரீம் ஜனத்திடம் சென்று கேட்ச் ஆனது.. இந்த விக்கெட்டை ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினர்.
அதேபோல பெவிலியனுக்கு சென்ற ஆசிப் அலி அருகே சென்று விக்கெட் எடுத்த ஃபரீத் அகமது கொண்டாடினார் இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி பேட்டால் அடிக்க ஓங்கினார். இருவரும் வார்த்தையால் தாக்கிக் கொண்டனர் இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பூதாகரமானது. பின் அங்கிருந்த சக வீரர்கள் மற்றும் அம்பையர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.. இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அணியின் ரசிகர்கள் மைதானத்தின் இருக்கைகள் அனைத்தையும் பிடுங்கி நாசம் செய்ததோடு, அதனால் பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கியதும் பெரும் வைரலானது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே புதன்கிழமை, செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த ஆசிய கோப்பை மோதலின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 19வது ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சிற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்திற்காக இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசிஃப் அலி ஐசிசி நடத்தை விதி 2.6ஐ மீறினார். இவர் சர்வதேச போட்டியின் போது ஆபாசமான, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் சைகையைப் பயன்படுத்துவது போன்ற செயலை செய்துள்ளார்.
அதேபோல ஃபரீத் விதி 2.1.12ஐ மீறியது கண்டறியப்பட்டது. “ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) பொருத்தமற்ற உடல் தொடர்பு விதியை மீறியது தெரியவந்துள்ளது. வீரர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழியப்பட்ட தடைகளை ஏற்றுக்கொண்டனர்.