திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தாசன் “திருநெல்வேலி விஜயநாராயணபுரத்தில் மாலைநேர கபடி போட்டி நடத்த அனுமதிகோரி” உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது “கபடிபோட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது.
இதையடுத்து சாதிய ரீதியிலான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல்கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்ககூடாது. அதன்பின் கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று (அல்லது) 2 மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு அனைத்து முதலுதவி சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் இருத்தல் வேண்டும்.
அத்துடன் விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்துகொடுத்திருக்க வேண்டும். மேலும் போட்டியில் கலந்துகொள்பவர்கள் போதைப்பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறும் விதமாக போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு போட்டியை நிறுத்தலாம் என கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.