Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAFG : பொளந்து கட்டிய கோலி…… தெறிக்க விட்ட புவி….. வெற்றியுடன் வெளியேறிய இந்தியா..!!

ஆசியக்கோப்பை கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது.

இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கே.எல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல தீபக் சாஹர், அக்சர் பட்டேல் இருவரும் அணியில் இடம் பிடித்தனர். மேலும் தினேஷ் கார்த்திக்கிற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ராகுலும், விராட் கோலியும் களமிறங்கினர்..

இருவரும் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த அதிரடி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 41 பந்துகளில் 62 ரன்கள் ( 2 சிக்ஸர், 6 பவுண்டரி) எடுத்த கே.எல் ராகுல் 13-வது ஓவரின் 4ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலயே சிக்சர் அடித்து விட்டு அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்..

பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் பண்ட் பொறுப்புடன் பொறுமையாக ஆட விராட் கோலி விஸ்வரூபம் எடுத்து ஆடினார். இறுதியில் சதம் அடித்து டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் கோலி சதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். விராட் கோலி 61 பந்துகளில் 122* ரன்கள் (6 சிக்ஸர், 12 பவுண்டரி) எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல பண்ட் 20 (16) ரன்களுடன் களத்தில் இருந்தார்.. இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இமாலய இலக்கான 213 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.. இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் புவனேஸ்வர் குமார் வீசிய  3ஆவது ஓவரில் கரீம் ஜனத் 2, நஜிபுல்லா ஸத்ரான் 0 ரன்களில் இருவரும்  ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் 3 ஓவரில் 9/4 மட்டுமே எடுத்து தத்தளித்தது..  அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 6ஆவது ஓவரில் முகமது நபியும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின் மீண்டும் புவனேஸ்வர் குமாரின் அடுத்த ஓவரில் அஸ்மத்துல்லா உமர்சாய் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின் வந்த ரஷீத் கான் 15, முஜீப் உர் ரகுமான் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இப்ராகிம் சத்ரான் மட்டும் முடிந்தவரை ஆடி 64 (59) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. பரீத் அகமது 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆறுதலுடன் ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

Categories

Tech |