கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுந்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் தொட்டி பகுதியில் ரேவண்ணா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் சிமெண்ட் ஓடு வீட்டின் மின் இணைப்பு காளி பெயரில் இருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணா தனது வீட்டிற்கு 40 முதல் 50 யூனிட் வரைய மின்சாரம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது வீட்டிற்கு மின் கட்டணம் வராமல் இருந்தது.
இந்நிலையில் 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரேவண்ணாவின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேவண்ணா தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது மின் கட்டணம் கணக்கீடு செய்யும் போது குளறுபடி நடந்திருக்கும். அதனை சரி செய்து தருகிறோம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொழிலாளியின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.