தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்திலுள்ள ஒருதனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரேயிருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் 3 இருசக்கர மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சட்டென சாமிநாதனை சரமாரியாக கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதனால் சாமிநாதன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், சாமிநாதனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சகோதரி திருமணத்திற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை மர்மகும்பல் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னெச்சரிக்கையாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.