இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச் சேவையை முடக்கும்படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து ஆகிய நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்க ஏர் இந்தியா நிறுவனம் புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே டாடா குழுமம் அதை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் அடிப்படையில் பயணச் சேவையில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது. அதிலும் குறிப்பாகப் பயணிகள் பயண விபரங்கள் குறித்து அறிய, பிளாக் டைமிங், விமான நிலையங்களை இணைக்கும் நேரம், விமானம் மற்றும் பணியாளர்களின் ஷிப்ட் போன்றவற்றை ஆய்வு மேற்கோடுள்ளது. ஏர்இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான கேம்ப்பெல் வில்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கக் கூடுதல் விமானங்களைக் கவர் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்திருந்தார்.
அத்துடன் பயணிகள் விரும்பக்கூடிய அனைத்து ஸ்மார்ட் விஷயங்களையும் சீசன் வாரியாக அரங்கேற்ற இருப்பதாகவும், விமான நிலையம் சார்ந்த சிக்கல்களை அறிந்துகொள்ள விமான நிலையம், மையக் கட்டுப்பாடு, பிராந்திய கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விமானச் சேவையில் ஏற்படும் தாமதங்கள், அட்டவணை மாற்றங்கள், ரத்து ஆகிய தகவல்களை முன்கூட்டியே விமான பயணிகளுக்குத் தெரிவிப்பதற்கான புது தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் இடத்திற்கான விமானச் சேவையை சுயமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இதுவரையிலும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே விமானச்சேவை பற்றி அறிவிக்கக்கூடிய 7 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு அனைத்தையும் பட்டியலிட ஏர்இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்கள் பணிபுரிந்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலம் வாயிலாக கைப்பற்றியது. தங்கள் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்து சென்ற மாதம் கூட 24 உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவுசெய்யப்பட்டது. இப்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 70 விமானங்கள் உள்ள நிலையில், அதில் 54 விமானங்கள் சேவை வழங்கி வருகிறது. மீதம் உள்ள 16 விமானங்கள் 2023 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகச் சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.