Categories
கிரிக்கெட் விளையாட்டு

1 ரன்னில் தோல்வி; 2 ரன்களில் வெற்றி! இங்கிலாந்து அணியின் கம்பேக்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.

இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தோடு இங்கிலாந்து அணி களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Eng vs SA

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 47, ஜேசன் ராய் 40, மொயின் அலி 39 ரன்கள் அடித்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக், டெம்பா பவுமா அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். 17 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் வேகமாக அரைசதம் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

De Kock

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், எட்டு சிக்சர்கள் உட்பட 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டெம்பா பவுமா (31), டேவிட் மில்லர் (21), ஜே.ஜே ஸ்முட்ஸ் (13), பெலுக்வாயோ (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 16.4 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறியிருந்தது.

இந்த நிலையில், வான்டெர் டுசேன் – துவைன் பெட்ரோசியஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. டாம் கரண் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை பெட்ரோசியஸ் சிக்சருக்கும், நான்காவது பந்தை பவுண்டரிக்கும் அனுப்பினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பெட்ரோசியஸ் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

tom curran

அவரைத் தொடர்ந்து வந்த ஜார்ன் ஃபார்டியூன் டாம் கரண் வீசிய ஸ்லோயர் பந்தை ஸ்கூப் ஷாட் ஆடினார். ஆனால், நல்ல உயரத்துக்கு சென்ற பந்து நேராக ஷார்ட் ஃபைன் லெக் திசையிலிருந்த அடில் ரஷித்திடம் பிடிபட்டது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்துகளை எடுத்ததால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு இங்கிலாந்து அணி இப்போட்டியில் பழிதீர்த்துக்கொண்டது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி வரும் 16ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறவுள்ளது.

Categories

Tech |