நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷின் மகன் ஆகாஷ்(24) என்பவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் இரும்பு பொருட்களை திருடி கடைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வாழ்க்கையை கழித்து வந்தனர். இந்நிலையில் இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை அடுத்து இருவரும் மது வாங்கி குடித்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த பிரகாஷ் மகன் ஆகாஷ், ராஜ் மகன் ஆகாஷின் மார்பில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மற்றொரு ஆகாஷை கைது செய்தனர்.