கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. மேலும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகியது.
அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இந்த பிரச்சனை முடிவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அதிகாலை 5 மணி வரை பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதனையடுத்து அவர்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர். மேலும் அங்கு வீடுகளில் இருந்த மக்களுக்கு பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட உணவு பொட்டலங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சென்று வினியோகம் செய்தனர். அதனைப்போல சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி சாலையில் கைகொண்டரஹள்ளியில் சன்னி புரூக்ஸ் லே-அவுட்டிலும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியுள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து கர்நாடகத்தில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதாவது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.