இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நாங்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் சிறப்பாக தொடக்கம் கொடுத்ததால் ரன்ரேட் 10ல் சென்று கொண்டிருந்தது. பின் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.. அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரிலும் வரிசையாக விக்கெட் விழுந்ததன் காரணமாக அணியின் ரன் ரேட் சற்று குறைந்தது.
அதாவது சூரியகுமார் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 0, மற்றும் தீபக் ஹூடா 16 என முக்கிய வீரர்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. அந்த சமயம் மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய விராட் கோலி சிறப்பாக நங்கூரமாக நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 4 பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 182 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பாபர் அஸாம் 14 மற்றும் பக்கர் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியதன் காரணமாக பாகிஸ்தான் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்களும், முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.. இருப்பினும் கடைசியாக குஷ்தில் சா 14 (11) ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.. அதே சமயம் இந்த போட்டியில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரிலும், பவுலிங்கிலும் சொதப்பியதன் காரணமாக தோற்று தலைகுனிந்துள்ளது.
இதில் குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 18 வது ஓவரில் அப்போது களத்துக்கு உள்ளே வந்த ஆசிப் அலி 0ரன்னில் இருந்தபோது ஒரு கேட்சை கொடுத்தார். அந்த பந்து கீப்பருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது.. எளிமையான அந்த கேட்சை அவர் விட்டுவிட்டார். இதுவே இந்தியா தோல்விக்கு முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொந்தளித்து அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. சில ரசிகர்கள் எல்லை மீறி அவரை தேவையில்லாத வார்த்தைகளால் பேசி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர் அந்த ஒரு கேட்சை விட்டிருந்தாலுமே 3.5 ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறார்.. அவர் மட்டுமே அந்த கேட்சை பிடிக்காதது மட்டுமே தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. இது போன்ற முக்கியமான தொடரில் 100 – 200 போட்டியில் விளையாடிய அனுபவமுள்ள வீரர்களே சில சமயங்களில் கேட்சை கோட்டை விடும் நிலையில், இவர் புதிதாக 10 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.
எனவே வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என தெரிந்தும் இந்த வீரரை மோசமாக விமர்சிப்பது தவறு என்றே சொல்லலாம். இந்த நிலையில் நிறைய இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் விராட் கோலி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், மதன் லால் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங் கூறியதாவது, நாங்கள் போட்டியைப் பார்க்கச் சென்றோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். தங்கள் அணி தோல்வியடைந்தால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள், கோபமடைந்து சில வார்த்தைகள் பேசுகிறார்கள். நாங்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம், எந்த பிரச்சனையும் இல்லை,” என்றார்
அதேபோல அர்ஷ்தீப் சிங்கின் தாயார் தல்ஜீத் கவுர் கூறுகையில், நாங்களும் முதல் போட்டியைப் பார்த்தோம், இரண்டாவது போட்டியும் நன்றாக இருந்தது. ஆனால் சில தவறுகள் நடக்கலாம், யாராலும் நடக்கலாம். மக்களிடம் சொல்லும் பழக்கம் உள்ளது, அவர்கள் சொல்லட்டும். மக்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்கள் அவரை நேசிக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று கூறினார்.
"We also watched the first match and the second match was also good but silly mistakes happen and can happen by anyone. People have a habit to say, let them say. If people are commenting on it, it means they love him," says Daljeet Kaur, mother of Indian cricketer Arshdeep Singh pic.twitter.com/Cgk2webV1i
— ANI (@ANI) September 5, 2022