இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அர்ஷ்தீப் சிங்கிற்கு ட்விட்டரில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் சிறப்பாக தொடக்கம் கொடுத்ததால் ரன்ரேட் 10ல் சென்று கொண்டிருந்தது. பின் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.. அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரிலும் வரிசையாக விக்கெட் விழுந்ததன் காரணமாக அணியின் ரன் ரேட் சற்று குறைந்தது.
அதாவது சூரியகுமார் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 0, மற்றும் தீபக் ஹூடா 16 என முக்கிய வீரர்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. அந்த சமயம் மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய விராட் கோலி சிறப்பாக நங்கூரமாக நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 4 பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 182 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பாபர் அஸாம் 14 மற்றும் பக்கர் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியதன் காரணமாக பாகிஸ்தான் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்களும், முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.. இருப்பினும் கடைசியாக குஷ்தில் சா 14 (11) ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.. அதே சமயம் இந்த போட்டியில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரிலும், பவுலிங்கிலும் சொதப்பியதன் காரணமாக தோற்று தலைகுனிந்துள்ளது.
இதில் குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 18 வது ஓவரில் அப்போது களத்துக்கு உள்ளே வந்த ஆசிப் அலி 0ரன்னில் இருந்தபோது ஒரு கேட்சை கொடுத்தார். அந்த பந்து கீப்பருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது.. எளிமையான அந்த கேட்சை அவர் விட்டுவிட்டார். இதுவே இந்தியா தோல்விக்கு முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொந்தளித்து அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. சில ரசிகர்கள் எல்லை மீறி அவரை தேவையில்லாத வார்த்தைகளால் பேசி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர் அந்த ஒரு கேட்சை விட்டிருந்தாலுமே 3.5 ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறார்.. அவர் மட்டுமே அந்த கேட்சை பிடிக்காதது மட்டுமே தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பாண்டியா, பண்ட் சொதப்பல் மற்றும் பந்துவீச்சிலும் புவனேஷ் குமார், பாண்டியா, சஹால் போன்ற வீரர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும் தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம்.. இது போன்ற முக்கியமான தொடரில் 100 – 200 போட்டியில் விளையாடிய அனுபவமுள்ள வீரர்களே சில சமயங்களில் கேட்சை கோட்டை விடும் நிலையில், இவர் புதிதாக 10 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.
எனவே வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என தெரிந்தும் இந்த வீரரை மோசமாக விமர்சிப்பது தவறு என்றே சொல்லலாம். இந்த நிலையில் நிறைய இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் விராட் கோலியும் அர்ஷ்தீப் சிங்கிற்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், இளம் வீரர் அர்ஷ்தீப்சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.. வேண்டுமென்றே யாரும் கேட்சை கைவிடுவதில்லை.. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது.. ஆர்ஷ் மற்றும் டீம் இந்தியா பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது வெட்கப்பட வேண்டியது.. அர்ஷ் என்பது தங்கம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், மதன் லால் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
Stop criticising young @arshdeepsinghh No one drop the catch purposely..we are proud of our 🇮🇳 boys .. Pakistan played better.. shame on such people who r putting our own guys down by saying cheap things on this platform bout arsh and team.. Arsh is GOLD🇮🇳
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2022