சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அந்த நபர், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான காவலர்கள் விக்னேஷை கைது செய்தனர்.
இதேபோன்று வேறு எத்தனை பெண்களிடம் விக்னேஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.