தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவேதிக்குடி கண்டியூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது ஆகும். இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பழமை வாய்ந்த நடராஜர் சிலை ஒன்று இறந்துள்ளது. இந்த சிலையை கடந்த 62 வருடங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து திருவேதிக்குடி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், கோவிலில் புகார் கொடுத்தவர் கூறியிருந்தது போல் இருந்தது போலியான சிலை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்த அசல் நடராஜர் சிலையின் புகைப்படத்தை பெற்றுக்கொண்டு காணாமல் போன சிலையை தேடி வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் தற்போது காணாமல் போன நடராஜர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலையை யுனெஸ்கோ உதவியுடன் தமிழகத்திற்கு திரும்பக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.