சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இவர் விழாவில் பேசியதாவது, கடந்த 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. அப்படி பார்த்தால் இது 160-வது ஆண்டு. இவ்வளவு பழமை வாய்ந்த நீதிமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் அடைகிறேன். இந்த 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களுக்கு மட்டுமே வாய்ந்த பெருமை. தமிழர்களின் வாழ்வியலில் இரண்டற கலந்தது தான் நீதியும், நேர்மையும்.
இந்த நீதி துறையை மதித்து அதற்கான தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் திருப்பூர், திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் விதத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதோடு நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக நீதிபதி ரமணாவே பாராட்டியுள்ளார்.
அதன் பிறகு சில கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தின் நீதி அரசர்களின் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளை சென்னையில் அமைய வேண்டும். இதன் மூலம் தென்னிந்திய மக்கள் பயனடைவார்கள். நீதிமன்றத்தில் நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் விசாரணையை புரிந்து கொள்ளும் விதத்தில் வாதங்கள் தமிழ் மொழியில் அமைய வேண்டும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரதிநிதித்துவம் வாய்ந்த வகையில் நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை இங்கு வருகை புரிந்து இருக்கும் நீதி அரசர்கள் பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.