ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில் தற்போது கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்தும் வகையில் பைசாட்டோ என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்ததாவது: “ஆன்லைன் வணிகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் வருகைக்குப் பிறகு சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகின்றனர்.
சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு பைசாட்டோ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் பயன்பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் இந்த செயலியின் மூலம் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் சலுகையாக குறிப்பிட சதவீத தொகை அவர்களது கணக்கில் வரவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி தற்போது சென்னையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.