விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவரை கொலை செய்த சக மாணவியரின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவருக்கு மணிகண்டன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டன் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினார். பின்னர் தனது தாயிடம் என்ன குளிர்பானம் கொடுத்தீங்க? அதை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறியுள்ளார். அதற்கு தாய் நான் ஒன்றும் கொடுக்கவில்லையே என்று கூற சிறிது நேரத்தில் மணிகண்டன் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்த மாலதி தனது மகனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்தபோது மணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரிய வந்தது. பின்னர் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு இடையில் மாணவனிடம் குளிர்பானத்தை அவரது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி தனது கணவர் ராஜேந்திரன் பள்ளிக்குச் சென்று காவலாளியை விசாரிக்க பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அதே பள்ளியில் படிக்கும் சக மாணவி ஒருவரின் தாயார் காவலாளி இடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் சிகிச்சை பழனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் தாயாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.