சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.அதன்படி ஒரு நாள் முழுக்க எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று முதல் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இன்று காலை 6 மணி முதல்இரவு 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் சாலைகளில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் விளையாடலாம்,உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஏதேனும் பயிற்சிகளில் ஈடுபடலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.சென்னை பெசன்ட் நகர் ஆறாவது அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள 32 வது குறுக்குத் தெருவில் இருந்து மூன்றாவது பிரதான சாலை சந்திப்பு வரை இந்த வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இன்று மட்டுமல்லாமல் செப்டம்பர் 11, 18, 25 மற்றும் அக்டோபர் 2, 16, 23 ஆகிய தேதிகளில் இந்த வாகனம் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை திட்டம் அமல்படுத்தப்படும். இதனால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.